×

மாவட்டத்தில் கொரோனா குறைந்து வருகிறது

கோவை, நவ. 1: கோவை மாவட்ட முகாம் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்ததாவது: கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் பணி, திருச்சி சாலை மேம்பாலம் பணி உள்ளிட்ட உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மானிய விலையில் வீடுகளை கட்டிக்கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி குளக்கரை பொலிவுபடுத்தும் பணி, பந்தயசாலையில் சிந்தட்டிக் நடைபாதை உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்திற்கு முன்னதாகவே முடித்திட வேண்டும். பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தித்திட்டம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.  

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஆற்றங்கரையோரங்களில் குடியிருக்கும் பொதுமக்களை கனமழையின்போது பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீட்புக் குழுக்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு உடனடியாக தேவைப்படும் உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...