ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று உறுதி ஈரோட்டில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

ஈரோடு, நவ. 1: ஈரோடு மாவட்டத்தில் நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,303 ஆக உயர்ந்துள்ளது. இதில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 151 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,367 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 812 பேருக்கு மருத்துவமனைகளிலும், அரசின் முகாம்களிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு சத்தியை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த 24ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு, ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29ம் தேதி உயிரிழந்தார். ஈரோடு குமரன் நகரை சேர்ந்தவர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 59 வயது முதியவரும் கடந்த 29ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், பாலக்காட்டூரை சேர்ந்தவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த 66 வயது முதியவரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று பேரின் இறப்பு விவரம் சுகாதாரத்துறையினர் பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்டிருந்ததால், மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: