×

சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயராததால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி

ஈரோடு, நவ. 1:  ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் கரும்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் போன்றவைகள் 30 கிலோ சிப்பமாக (மூட்டை) சித்தோடு வெல்ல மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்வர். இங்கு வரத்தாகும் வெல்லங்களை கொள்முதல் செய்ய தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்து செல்வர். இந்நிலையில், நேற்று கூடிய சித்தோடு வெல்ல மார்க்கெட்டில், தீபாவளி பண்டிகையையொட்டி வெல்லம் வரத்து அதிகரித்திருந்த போதிலும் விலை உயரவில்லை.

இது குறித்து சித்தோடு வெல்ல மார்க்கெட் நிர்வாகிகள் கூறியதாவது:   இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில், நாட்டு சர்க்கரை 3,500 மூட்டையும், உருண்டை வெல்லம் 5,800 மூட்டையும், அச்சு வெல்லம் 900 மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டு சர்க்கரை மூட்டை (30 கிலோ) ஒன்று ரூ.1,100 முதல் ரூ.1,180 வரையும், உருண்டை வெல்லம் மூட்டை ஒன்று ரூ.1,080 முதல் ரூ.1,160 வரையும், அச்சுவெல்லம் மூட்டை ரூ.1,100 முதல் ரூ.1,160 வரையும் விற்பனையானது. தீபாவளிக்கு இன்னும், 13 நாட்களே உள்ள நிலையில் இந்த வாரமும் வெல்லத்தின் விலை உயரவில்லை.   இந்த ஆண்டு   கொரோனா  பரவல் காரணமாக மக்களிடமும், வியாபாரிகளிடமும் பணப்புழக்கம் குறைவாக உள்ளதால், வெல்லம், நாட்டு சர்க்கரை விற்பனை குறைந்து, மொத்த விற்பனை சரிந்துள்ளது. இந்த வாரம் விலை உயரும் என எதிர்பார்த்த உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

Tags : Manufacturers ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு