×

முறைப்படி ஊதியம் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை

புதுக்கோட்டை, அக்.30: புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலகப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு அக்டோபர் முதல் வாரத்தில் அளிக்க வேண்டிய ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் அனைவரும் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர்பாஷாவிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்தனர்.ஓரிரு நாட்களில் ஊதியம் வழக்கம்போல வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அவர் உறுதியளித்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இரு நாட்கள் கழித்தும் ஊதியம் வராததால், நேற்று காலை நகராட்சி அலுவலக வாயிலை முற்றுகையிட்டு நகராட்சிப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைதிப்பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு முறையாக காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி முழக்கம் எழுப்பினர்.

மேலும் தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாகவும் அமைதிப்பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் கலைந்து சென்றனர். இதனால், நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : blockade protest ,office ,Kottayam ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்