×

செட்டிகுளத்தில் இடுகாட்டுப்பாதை அமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தலித் கிறிஸ்தவர்கள் நூதன போராட்டம்

பெரம்பலூர், அக். 30: இடுகாட்டுப்பாதை அமைத்துதர வலியுறுத்தி செட்டிக்குளம் தலித் கிறிஸ்தவர்கள் கைகளில் சிலுவைகளை ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இடுகாட்டு பாதை அமைத்துத்தர வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளத்தை சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் நேற்று கைகளில் சிலுவைகளுடன் வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநில துணை பொது செயலாளர் சின்னைபாண்டியன், மாவட்ட தலைவர் செல்லதுரை, மாவட்ட செயலாளார் கருணாநிதி, செட்டிக்குளம் கிளை தலைவர் லாரன்ஸ், திக மாவட்ட தலைவர் தங்கராசு, விசிக மாநில செயலாளர் வீர செங்கோலன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராஜ் உள்ளிட்டோருடன் தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கலெக்டர்(பொ) ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தனர். அதில் நவம்பர் 2ம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிக்க உள்ளனர். செட்டிகுளம் கிராமத்தில் ஆண்டுதோறும் கல்லறை திருநாள் நிகழ்ச்சி நடத்தப்படும். கடந்த 8 மாதங்களுக்கு முன் செட்டிகுளத்தை சேர்ந்த சிலர், இப்பகுதி தலித் கிறிஸ்தவர்கள் காலம்காலமாக சடலங்களை கொண்டு செல்ல சென்று வந்த இடுகாட்டு பாதையை மறித்து தங்களுக்கு பட்டா இருப்பதாக கூறி கம்பிவேலியை போட்டு அடைத்து தடுத்து விட்டனர். இதுதொடர்பாக பலமுறை போராட்டங்கள் நடத்தியதுடன் வருவாய்த்துறை அதிகாரிகள், கலெக்டரிடமும் புகார் மனுக்களை அளித்தோம். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு மாற்றுப்பாதை ஏற்படுத்தி தருவதாக உறுதிளித்தனர்.

இந்த சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இடுகாட்டு பாதை வசதி ஏற்படுத்தவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு நிரந்தர பாதை வசதியை அமைத்துத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர் (பொ) ராஜேந்திரன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் பேசி நாளை (31ம் தேதி) இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கல்லறை திருநாளுக்கு பாதை வசதியை செய்து தர உத்தரவிட்டார்.

Tags : Christians ,cemetery ,Collector ,Chettikulam ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்