×

சேலம், தர்மபுரி மாவட்டங்களை இணைக்க காவிரியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை

மேட்டூர், அக்.30: சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு பணியின்போது தர்மபுரி, சேலம் எம்.பி.க்கள் தெரிவித்தனர். தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், சேலம் எம்பி பார்திபன், முன்னாள் எம்எல்ஏ கோபால் ஆகியோர் நேற்று கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் பரிசல்துறை பகுதியில் காவிரி ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் காவிரி நீர் பச்சை நிறத்துடன், கடும் துர்நாற்றம் வீசியது. பாறைகளில் ஊதா நிறத்தில் படிவங்கள் படிந்திருந்தது. சுமார் ஒரு மணி நேர ஆய்வுக்கு பின்பு, எம்.பி.க்கள் டாக்டர் செந்தில்குமார், பார்திபன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது:கொளத்தூர் ஒன்றியம் கோட்டையூரில், காவிரி நீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆலை கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகளை நேரடியாக, காவிரியில் விடுவதுதான் அதற்கு காரணம்.  இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பாறைகள் நிறம் மாறி ஊதா நிறத்தில் காணப்படுகிறது. இதனை தூய்மைப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. அதிமுக அரசும் கண்டுகொள்ளாத காரணத்தால், கரையோர கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள், நுரையீரல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டையூரிலிருந்து மேட்டூர் வரையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. முதல்வர் மாவட்டத்திலேயே முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

இப்பகுதியில் காவிரி நீரை எடுத்து குடிநீருக்கு வழங்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால், மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்படும். இதனை தவிரக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளும், குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டம் கோட்டையூரிலிருந்து, தர்மபுரி மாவட்டம் ஒட்டனூருக்கு காவிரியை கடந்து செல்ல, சுமார் இரண்டு கி.மீ., தொலைவுதான் உள்ளது. நெருப்பூர், ஒட்டனூர், ஏரியூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, சேலம் மாவட்டம் கொளத்தூர் மேட்டூர் உள்ளிட்ட இட்டங்களுக்கு பள்ளி மாணவ -மாணவியரும், பொதுமக்களும் பரிசல் அல்லது படகு மூலம் காவிரியில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் படகு போக்குவரத்து நிறுத்தப்படும். அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் செல்லமுடியாது. சாலை வழியாக சென்றால் சுமார் 70 கி.மீ தொலைவு சுற்றிதான் இப்பகுதிக்கு வர முடியும். இரு மாவட்ட மக்களும் இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். காவிரியை கடந்து செல்ல பாலம் அமைத்தால், ஒகேனக்கல், பெங்களூரு செல்ல தூரம், மற்றும் நேரம் குறைவதோடு வாகனங்களுக்கு எரி பொருளும் மிச்சமாகும். எனவே, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி, இப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : bridge ,districts ,Cauvery ,Dharmapuri ,Salem ,
× RELATED காரில் கட்டுக்கட்டாக ரூ.2.83 கோடி சிக்கியது