கல் குவாரியை மக்கள் முற்றுகை

ஓமலூர், அக்.30: ஓமலூர் அருகே சங்கீதப்பட்டி ஊராட்சியில் வெத்தலைக்காரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் கல் குவாரிக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்தினர், எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் வெடி வைத்து பாறைகளை தகர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், நேற்று கல் குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ளனர். அப்போது, சிதறிய கற்கள் குடியிருப்பு பகுதிக்குள் பறந்து வந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்தது. மேலும், அங்குள்ள இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். கால்நடைகளும் பாதிப்பிற்குள்ளாகின. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கல் குவாரி நிர்வாகிகள் சமரசப்படுத்தினர். அப்போது, அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>