உக்கடம் மேம்பாலத்தின் கீழே கடும் போக்குவரத்து நெரிசல்

கோவை, அக். 30: கோவை உக்கடம் மேம்பாலத்தின் கீழ் புதியதாக போடப்பட்ட சர்வீஸ் ரோட்டில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல நேற்று முதல் அனுமதி வழங்கியதை அடுத்து அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை மேம்பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனால், உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை, ஆத்துப்பாலம் செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை புட்டுவிக்கி பாலம் வழியாக சுற்றி வருகிறது. மேலும், கரும்புக்கடையில் இருந்து உக்கடம் வருவதற்கு கார், டூவிலர் போன்ற வாகனங்கள் உக்கடம் குளத்தின் மேல் உள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது உக்கடம் மேம்பால பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை செல்லும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது. இதில், டூவிலர், கார், ஆட்டோ, மினிடோர் போன்ற இலகுரக வாகனங்கள் செல்ல நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் புதிய ரோட்டில் இயக்கப்பட்டது.

மேலும், கரும்புக்கடையில் இருந்து உக்கடம் வரும் பெரும்பாலான வாகனங்கள் குளத்தின் மேலுள்ள சாலையை பயன்படுத்தாமல், கீழே புதியதாக போடப்பட்ட சாலையை பயன்படுத்தினர். இதன் காரணமாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பலர் அவதிப்பட்டனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த புதிய வழி ஆத்துப்பாலம் செல்ல எளிமையாக இருக்கிறது. ஆனால், கரும்புக்கடையில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த சர்வீஸ் ரோட்டினை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. கொரோனா பரவலும் ஏற்படும்” என்றனர்.

Related Stories: