காரீய நஞ்சு தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கம்

ஈரோடு, அக்.30:  காரீய நஞ்சு தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கியது.காரீய நஞ்சு தடுப்புக்கான சர்வதேச விழிப்புணர்வு வாரம் அக்.25ம் தேதி முதல் 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே  தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காரீய நஞ்சு தடுப்புக்கான விழிப்புணர்வு வாகன துவக்க நிகழ்ச்சி நடந்தது.  இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் சி.என்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  பிரசார விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார். தமிழக பழங்குடியின மக்கள் சங்க தலைவர் வி.பி.குணசேகரன் முன்னிலை வகித்தார்.இதில், பெயிண்ட்களில் அளவுக்கு அதிகமாக காரீயம் கலக்கப்படுகிறது. இக்கலப்பு, மிகப்பெரிய நஞ்சு தன்மையை ஏற்படுத்தும். உலக அளவில் குழந்தைகள் எதிர் நோக்கும் மிக ஆபத்தான அச்சுறுத்தலில், காரீயம் கலப்பு முக்கியமானதாகும்.

 உலகில் ஆண்டுக்கு, 10 லட்சம் மேற்பட்ட குழந்தைகள் காரீய நஞ்சால் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். காரீயம் கலக்கப்பட்ட வண்ணப்பூச்சை தவிர்க்க வேண்டும். பழைய வண்ணப்பூச்சில் இருந்து வெளிப்படும் துகள்கள், சிதறல் ஆபத்தானது.  வண்ணம் தீட்டப்பட்ட பொம்மைகள், வண்ண மிட்டாய்கள், அழகு சாதன பொருட்கள் ஆபத்தானது. காரீயம் பூசிய குழாய், பாத்திரங்களை தவிர்க்க வேண்டும். காரீய பயன்பாட்டால், மனநிலை பாதிக்கும். நிரந்தர தசை முடக்கம், குறைந்த அறிவுக்கூர்மை, காது கேளாமை, ரத்த சோகை, உறுப்புகளின் இயல்பு மீறிய வளர்ச்சி, கற்றல் மற்றும் படித்தலில் சிரமம், மூளை பாதிப்பு, கோமா மற்றும் இறப்புக்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, காரீயம் கொண்ட பொருட்களை தவிர்ப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Related Stories: