உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் விஷம் கொடுத்து கொலை கள்ளக்காதலன் கைது

உளுந்தூர்பேட்டை, அக். 30:  உளுந்தூர்பேட்டை அருகே விஷம் கொடுத்து இளம்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சிறுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் இவருடைய முதல் மனைவி இறந்ததால் லதா(30) என்ற பெண்ணை கடந்த 10 வருடத்திற்கு முன்னர் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. லதாவுக்கும், இதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(45) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக இரண்டு பேர் குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் லதாவும், ஏழுமலையும் எ.குமாரமங்கலம் அய்யனார் கோயில் பின்புறம் உள்ள சிறுப்பாக்கம் ஏரி பகுதியில் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.  இரவில், லதாவை வாயில் நுரை தள்ளிய நிலையில்,  இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏழுமலை சேர்த்துள்ளார்.

அங்கு  சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த ஏழுமலை அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவம் லதாவின் உறவினர்களுக்கு தெரியவந்ததை அடுத்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பத்மா, சப்இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரா மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற சிறுப்பாக்கம் ஏரிக்கு சென்று பார்த்ததில் அங்கு லதாவின் செருப்பு, மதுபாட்டில், குளிர்பான பாட்டில், பூச்சி மருந்து உள்ளிட்டவை இருந்தது கண்டு எடுக்கப்பட்டது.இதுகுறித்து லதாவின் கணவர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஏழுமலை போலீசில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், இருவரின் கள்ளத் தொடர்பு குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று இரவு சிறுபாக்கம் ஏரிக்கு சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து லதாவுக்கு மட்டும் ஏழுமலை கொடுத்துள்ளார். இதனை குடித்த சிறிது நேரத்தில் அவர் உயிருக்கு போராடியதால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவானதாக தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: