×

ரவணசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் மோசடி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்க கோரி அமைச்சரிடம் கிராம மக்கள் மனு

கடையம், அக். 30: ரவண
சமுத்திரம் கூட்டுறவு சங்க மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அமைச்சர் ராஜலட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது.
கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த வங்கியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் பணத்தை சேமித்து வைத்திருந்தனர். அவர்கள் செலுத்திய பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. கணக்கில் பணமில்லை என்று பொதுமக்களை ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். இதனர் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  தற்போது கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் புகாரையடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள், அங்கு பணியிலிருந்த செயலாளர் ஷாஜகான், உதவியாளர் முத்துச்செல்வி ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பணத்தை திரும்ப கொடுக்க வலியுறுத்தி ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணாவி சலீம், முன்னாள் ஊராட்சி தலைவர் புகாரி மீராசாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல்காதர் ஆகியோர் அமைச்சர் ராஜலட்சுமியிடம் மனு அளித்தனர். அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்
பொதுமக்கள் அரசு வங்கியில் சேமிப்பு கணக்காகவும், பாண்டு பத்திரங்களாகவும், பணம் போட்டுள்ளதற்கான ஆவணங்களை வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டியது அரசும், அரசுடைய கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பாகும். இதனைச் செய்ய அரசு தாமதிக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும் வரை, அனைத்து கட்சிகளையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,victims ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...