ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு செய்ய குழு அமைப்பு தமிழக அரசு உத்தரவு

வேலூர், அக்.30:தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு வரும் 2025ம் ஆண்டு வரை நடைமுறைப்பட்டது. ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நவம்பர் 2020ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் முடிந்த நிலையில், கூட்டுறவுத்துறையின் செயல்படும் ரேஷன்கடை பணியாளர்கள் தற்போது பெற்றுவரும் ஊதிய விகிதங்களை பரிசீலித்து புதிய ஊதிய விகிதங்களை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு ஏதுவாக ஒரு குழுவினை அமைக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலனை செய்துள்ளது. அதன்படி பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு தற்போது பெற்று வரும் ஊதிய விகிதங்களைப் பரிசீலித்து புதிய ஊதிய விகிதங்களை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு ஏதுவாக 8 பேர் கொண்ட குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்த குழுவானது ஊதிய உயர்வு தொடர்பாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்து கோரிக்கைகளை பெறப்படும். அதனை பரிசீலித்து கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் ஆகியோருக்கு புதிய ஊதிய விகிதங்கள் மற்றும் அகவிலைப்படி, மருத்துவப்படி உள்ளிட்ட அனைத்து படிகள் வழங்குதல், தேர்வு நிலை, தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்கல் ஆகியவை பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: