குடியாத்தம் அருகே பரபரப்பு கர்நாடகாவுக்கு மினிலாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேரிடம் விசாரணை

குடியாத்தம், அக்.30: குடியாத்தம் அருகே மினி லாரியில் கடத்திச்சென்ற 4 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு மேற்பார்வையில் பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அதிலிருந்த 4 பேர் தப்பியோடினர். உடனே அதிகாரிகள் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர்.

தொடர்ந்து, லாரியை சோதனையிட்டதில் 4 டன் ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. பிடிபட்ட 2 பேரும் பேரணாம்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 4 டன் ரேஷன் அரிசி குடியாத்தம் கூட்டுறவு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பிடிபட்ட 2 பேரிடம், ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: