நடுவானில் பறந்தபோது விமானத்தில் கோளாறு 186 பேர் உயிர் தப்பினர்

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து அந்தமான் செல்லும் ஏர்இந்தியா விமானம் நேற்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. அதில் 181 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 186 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென தொழில்நுட்பகோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து அவசரமாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

அதன்படி காலை 6.15 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில்  பத்திரமாக தரையிறங்கியது. விமானத்திலிருந்த 186 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்பு பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு பயணிகள் ஓய்வு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.விமானத்தை பழுதுபார்க்கும் பணி நடக்கிறது. இதற்கிடையே பயணிகளை மாற்று விமானத்தில் அந்தமான் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.தகுந்த நேரத்தில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories: