×

பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழக அரசின் தொழிலாளர் துறையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் மூலமாக ஏற்படும் உயிரிழப்புக்கு உதவித் தொகை போன்றவை தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.  திருவள்ளுர் மாவட்டத்தில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட கட்டுமானம், உடலுழைப்பு, அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை, முடிதிருத்துவோர், தையல், கைவினை, கைத்தறி, விசைத்தறி, மண்பாண்டம், தெரு வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள் தொடர்புடைய நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளவும்.

ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை புதுப்பிக்க https:labour.tn.gov.in  என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள்; இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வயது சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான்றிதழ், கிராம நிர்வாக அலுவலர் சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். நலவாரிய பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் சமர்ப்பித்த பிறகு தகுதிவாய்ந்த தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் பதிவு எண் விவரம் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.  அந்த பதிவு எண் மூலம் பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...