×

கன்னியாகுமரியில் வாலிபர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்

நாகர்கோவில், அக்.29: கன்னியாகுமரி வாலிபர் தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என, வாலிபரின் தாய் மற்றும் சகோதரிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே பிள்ளையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாக்கியமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி வசந்தி.  இவர்களுக்கு சுபாஷ் ஆனந்த் (22) என்ற மகனும், சுனிதா, சுகன்யா என்ற இரு மகள்களும் உண்டு. இதில் சுபாஷ் ஆனந்த், நாகர்கோவிலில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். கடந்த செப்டம்பர் 17ம் தேதி சுபாஷ் ஆனந்த் மாயமானார். இது குறித்து அவரது தாயார் வசந்தி கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து (செப்டம்பர் 19ம் தேதி) கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் சுபாஷ் ஆனந்த் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி தற்கொலை என வழக்கை முடித்தனர்.

இந்த நிலையில் சுபாஷ் ஆனந்தின் தாயார் வசந்தி, கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் சுபாஷ் ஆனந்த் விஷம் குடித்து இறந்ததாக போலீசார் வழக்கை முடித்து விட்டனர்.  ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. அவனை விஷம் ஊற்றி கொலை செய்துள்ளனர். ராதாபுரம் பிள்ளையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடமும், அவரது கணவரிடமும் காணாமல் போன அன்று பலமுறை போனில் சுபாஷ் ஆனந்த் பேசி உள்ளான். இந்த குடும்பத்துக்கும், எங்களுக்கும் முன் விரோதம் உண்டு. எனவே அந்த முன் விரோதத்தில் எனது மகனை மலைக்கு அழைத்து சென்று விஷம் குடித்து கொன்றுள்ளனர். எனது மகன் உடல் கிடந்த இடத்தின் அருகே இரு விஷ பாட்டில்கள், மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் போதை பாக்கு பாக்கெட்டுகள் கிடந்தன. எனது மகன் அதிகமாக மது குடிக்க மாட்டான். மேலும் போதை பாக்கு பழக்கமும் கிடையாது. அவனது சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவனிடம் அதிகமாக போனில் பேசி இருந்த பெண்ணிடமும், அவரது கணவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றேன். ஆனால் கன்னியாகுமரி டி.எஸ்.பி இதில் விசாரணை நடத்த வில்லை.

கடந்த 16.10.2020 அன்று, எனது மகளுடன் டி.எஸ்.பி.யை சந்தித்து புகார் அளிக்க சென்றேன். ஆனால் அப்போது எனது மகளை டி.எஸ்.பி. மிரட்டினார். என் மகனின் பிரேத பரிசோதனை அறிக்கை  எங்களுக்கு கிடைக்கவில்லை. வேண்டுமென்றே பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காமல் இருக்க செய்ய வேண்டிய வேலைகளை காவல்துறை செய்கிறது. எனவே மகன் இறப்பு கொலையா? அல்லது தற்கொலைக்கு தூண்டலா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வசந்தியுடன் அவரது மகள்கள் சுனிதா, சுகன்யா ஆகியோர் வந்திருந்தனர்.

Tags : Kanyakumari ,
× RELATED 8 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரியில்...