×

காட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் கேலரியின் முகப்பு தோற்றம்.

வேலூர், அக்.29: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பல ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் குறிப்பாக வடமாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாலாற்றிலும் ஆந்திர மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை தாண்டி பாலாற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. அத்துடன் கவுண்டன்யா, பொன்னையாறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணையும், பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பொன்னை தடுப்பணையும் நிரம்பி வழிகின்றன. மோர்தானா அணையின் உபரி நீர் இருகால்வாய்கள் மூலம் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியாத்தம், பேரணாம்பட்டு வட்டாரங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நீர்வரத்தை பெற்றுள்ளன. இதில் ரெட்டிமாங்குப்பம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

தற்போது கவுண்டன்யா நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. அதேநேரத்தில் பொன்னையாற்றில் கிடைத்த நீர் மூலம் பிண்டந்தாங்கல், வீரவந்தாங்கல், கனக்கந்தாங்கல், பொம்மசமுத்திரம், வெப்பாலை, வீரந்தாங்கல், சர்ப்பந்தாங்கல், கீரைசாத்து, பாதநெல்லூர், குகையநெல்லூர், கத்தாழம்பட்டு உட்பட 13 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 104 ஏரிகளில் செங்கால்நத்தம், தகரகுப்பம், ரெண்டாடி, ஆவாரம், கும்மணந்தாங்கல், மருதம்பாக்கம், மாவேரி உட்பட 9 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சோளிங்கர், கொடைக்கல், பெருங்காஞ்சி ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. இதில் கொடைக்கல் ஏரி 90 சதவீதம் நிரம்பியுள்ளது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் குரும்பேரி, திம்மணபுதூர் பொம்மிகுப்பம் ஏரிகள் நிரம்பியுள்ளன. மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...