4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.29: நான்கு அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 50 ஆண்டுகளாக அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த அரசாணை 116, 37 ஆகியவற்றை உடனே தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். உயர்கல்வி பயில முன் அனுமதி வேண்டி உரிய முறையில் விண்ணப்பித்தும் கல்வி துறை அலுவலர்களால் உரிய காலத்தில் முன் அனுமதி வழங்கப்படாத நிலையில், உயர்கல்வி பயின்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பின்னேற்பு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் கல்வித்துறையில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகளை உடனே வழங்க வேண்டும், 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரஸ்கின் ராயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். துணை தலைவர்கள் முருகேசன், சாந்தி, இன்னாசி லாரன்ஸ், துணை செயலாளர் கண்ணன், தனலட்சுமி, வட்டார செயலாளர்கள் திருவெறும்பூர் அருள் மாசிலாமணி, மருங்காபுரி ராதாகிருஷ்ணன், மணப்பாறை குமாரவேலன், வையம்பட்டி தாமோதரன், மண்ணச்சநல்லூர் ரூபன் வினோத்குமார், புள்ளம்பாடி மணிவாசகம் உள்ளிட்ட பலர் விளக்க உரையாற்றினர். மாநில துணை பொதுசெயலாளர் கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் இன்னாசி முத்து ராபர்ட் நன்றி கூறினார்.

Related Stories:

>