×

விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் காய்கறி விதை பொட்டலம் விநியோகம்

மன்னார்குடி, அக்.29: கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் வட்டரங்களில் 40 சதவீத அரசு மானியத்தில் காய்கறி விதை பொட்டலங்கள் ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மன்னார்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தற்பொழுது மழை மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் காரணமாக காய்கறிகள் கடும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விலையேற்றம் மற்றும் செயற்கை உரம் அல்லாத காய்கறிகளை நம் வீட்டின் புறத்திலும் அல்லது மாடியிலோ இயற்கை முறையில் உற்பத்தி செய்து பயன் பெருவதினை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் 2020-21ன் கீழ் ரூபாய் 25 மதிப்புள்ள ஐந்து வகையான காய்கறி விதை பொட்டலங்கள் 40 சதவீத மானியத்தில் ரூபாய் 15க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஐந்து வகையான காய்கறி விதை பொட்டலங்களில் சிறப்பம்சம் நாட்டு ரக காய்கறி உற்பத்தியை பெருக்குவது மற்றும் தாமே உற்பத்தி செய்து பயன்படுத்துவது ஆகும். இந்தக் காய்கறி விதை பொட்டலங்களின் தொகுப்பில் கீரை 3 கிராம், வெண்டை 6 கிராம், முருங்கை 2 கிராம், கொத்தவரை 6 கிராம், கத்திரி 3 கிராம் ஆகிய காய்கறி விதைகள் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 400 காய்கறி விதை பொட்டலங்கள் தற்போது இருப்பு உள்ளது.
குறிப்பாக மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் வட்டாரங்களில் 1200 விதை பொட்டலங்கள் இருப்பு உள்ளது. மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் ஆர்வமுள்ள காய்கறி சாகுபடி செய்யும் நபர்கள் அந்தந்த வட்டாரங்களில் தங்களின் புகைப்படம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் கார்டு நகலை அந் தந்த வட்டாரங்களில் சமர்ப்பித்து காய்கறி விதை பொட்டலங்களை பெற்று பயனடையலாம்.

தொடர்புக்கு மன்னார்குடி வட்டாரத்திற்கு தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தினேஷ்பாபு 8489753737, பாலசுந்தரம் 9842672509, ஹரிஹரன் 9566974448 ஆகி யோரை தொடர்பு கொள்ளலாம். நீடாமங்கலம் வட்டாரத்திற்கு தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ராஜேந்திரன் 9655989291, அன்பரசன் 9843306301, ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். கோட்டூர் வட்டாரத்திற்கு இளங்கோவன் 7639330376, கவியரசன் 8667319762 மற்றும் கீர்த்திகா 8610885042 ஆகியோரை தொடர்புகொண்டு பயன் அடையலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...