×

ஆணையர் தகவல் பணி நியமன பட்டியலை வெளியிட எதிர்ப்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, அக்.29: துணை வட்டாட்சியர் நிலையிலான பணிநியமனம் குறித்த பட்டியலை வெளியிடக்கூடாது என்று தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்றிரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு போராட்டத்தால் மாவட்ட வருவாய் அலகு முடிவெடுக்க முடியாமல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் நிலையிலான பதவி உயர்வு நியமனம் குறித்த இரு வேறுபட்ட கருத்துகள் கடந்த ஆண்டு எழுந்தது. குறிப்பிட்ட சில விதிமுறைகளைப் பின்பற்றியதாக ஒரு சங்கத்தினரும், பின்பற்றவில்லை என ஒரு சங்கத்தினரும் போராட்டங்களை நடத்தினர். ஒரு கட்டத்தில் மாவட்ட வருவாய் அலகின் சார்பில் போடப்பட்ட பணிநியமன ஆணைகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து இரவு, பகலாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எவ்வித நீதிமன்றத் தடையும் இல்லாததால் தற்காலிகமாக அல்லாமல், நிரந்தரமாக பணி நியமன ஆணை வெளியிட வேண்டும் என்பது இவர்களின் தரப்பு கோரிக்கையாகும். இதற்கிடையே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று இரவு திடீர் போராட்டத்தில் குதித்தனர். மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

பதவி உயர்வு குறித்து நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் எந்த நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் பணிநியமனப் பட்டியலை வெளியிடக் கூடாது என்பது இவர்களின் தரப்பு கோரிக்கையாகும். இரு தரப்பினரின் போராட்டத்தால் மாவட்ட வருவாய் துறை முடிவெடுக்க இயலாமல் தவித்து வருவதாக இவ்விரு சங்கங்களின் நிலைப்பாட்டிலும் ஒத்துப்போகாத வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர். இரண்டாவது முறையாக மொத்த வருவாய்த் துறைப் பணிகளையும் நெருக்கடிக்குள்ளாக்கும் இந்தப் போராட்டங்கள் குறித்து மாநில அரசு நேரடியாகத் தலையிட்டு தெளிவான வழிகாட்டுதல்களையும் வரையறைகளையும் வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,release ,protests ,Officers' Association ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...