×

தன்னிச்சையாக செயல்படும் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் புகார் மனு

பெரம்பலூர், அக். 29: தன்னிச்சையாக செயல்படும் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது அன்னமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக மருதாம்பாள் செல்வகுமாரும், துணைத்தலைவராக அனுசியாமேரியும் உள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக 2ம் தளத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசனிடம் அன்னமங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் அனுசியாமேரி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் பிரபாவதி, குதரத்துல்லா, ரேவதி, கரோலின் ரூபி, உமா, ராஜேந்திரன், செலின்மேரி, கலையரசி, பனமலை உள்ளிட்ட 10 பேர் வந்து புகார் மனு அளித்தனர்.

அதில் அன்னமங்கலம் ஊராட்சி தலைவராக உள்ள மருதாம்பாள் செல்வக்குமார் பதவியேற்ற நாளில் இருந்து எந்தவித மாதாந்திர கூட்டத்தையும் முறைப்படி நடத்தியதில்லை. இதுவரை ஊராட்சி நிர்வாகத்துக்கு அரசிடமிருந்து எவ்வளவு பணம் வந்தது, அதை கொண்டு இதுவரை என்னென்ன பணிகளுக்காக செலவு செய்யப்பட்டது. என்னென்ன நலத்திட்டங்கள் வந்தது என்ற தகவல் எங்களுக்கோ, ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கோ தெரியாது. அதுபற்றி கேட்டாலும் தலைவர் சொல்வதில்லை. ஊராட்சி சட்டத்துக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படும் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : panchayat leader ,ward members ,vice-president ,Annamangalam ,
× RELATED திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஒருவரை...