படைப்புழு தாக்குதல், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம்

உடுமலை, அக். 29:  படைப்புழு தாக்குதல், வழட்சியால் பாதித்த மக்காச்சோளத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு குடிமங்கலம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிமங்கலம் சுற்று வட்டாரப்பகுதிகளில் பிஏபி பாசனம் மற்றும் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட மூங்கில்தொழுவு பகுதியில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நேற்று குடிமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டு வறட்சி மற்றும் படைப்புழுக்களின் தாக்குதலால் மூங்கில் தொழுவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கடும் மகசூல் இழப்பு ஏற்பட்டது. ஆனால் நாங்கள் பயிர்க்காப்பீடு செய்திருந்த நிலையில் தற்போது  8 சதவீதம் அளவுக்கே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளியம்பாளையம், தொட்டம்பட்டி, கோட்டமங்கலம் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதம் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ 14 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனிக்கடவு கிராம விவசாயிகளுக்கு 17 சதவீதம் இழப்பீடு  வழங்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேளாண்துறை அதிகாரிகள் யாரும் வராததே மூங்கிலத்தொழுவு பகுதிக்கு இவ்வளவு குறைவாக இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகும். எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் கூறினர்.

Related Stories: