போக்குவரத்து குளறுபடியால் உடுமலையில் வாகன நெரிசல்

உடுமலை, அக். 29:  போக்குவரத்துக் குளறுபடியால் உடுமலை நகரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு போக்குவரத்து போலீசார் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்றுவருகின்றன. உடுமலை சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் ஒருபுறம் பழனி நோக்கி செல்லும் வாகனங்களும், மறுபுறம் பொள்ளாச்சி நோக்கி செல்லும் வாகனங்களும் பயன்படுத்த வேண்டும். ஆனால் இருபுறமும் ஒரே நேரத்தில் வாகனங்கள் இருவழியையும் பயன்படுத்துகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் நடக்கின்றன.மெயின் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுவதால், கல்பனா ரோடு, வ உ சி வீதியிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன. பேருந்து நிலையத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை தாண்டி மறுபுறம் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், தீபாவளி நெருங்கும் நிலையில் தற்போதே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் புறநகர் பகுதியில் ஏதாவது ஒரு பீட்டை தேர்வு செய்து அங்கு வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். நகரின் பிரதான பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதை கண்டுகொள்வதில்லை. வாகன ஓட்டிகள் ஒழுங்குமுறையின்றி செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக போக்குவரத்து காவலரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும், என்றனர்.

Related Stories: