×

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஊட்டி, அக். 29: ஏ.ஐ.டி.யு.சி. தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் சார்பில் ஊட்டி ஏடிசி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகுநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ‘‘நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் சுமார் 370 குடிநீர் பம்ப் ஆபரேட்டர், 105 துப்புரவு பணியாளர்கள், 200க்கும் ேமற்பட்ட தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக அரசு பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் ஏதுவும் வழங்கப்படவில்லை. பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்கப்படவில்லை. எனவே ஊராட்சி குடிநீர் பம்ப் ஆபரேட்டர், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதோடு நிலுவை தொகையும் வழங்கப்பட வேண்டும்.

20 முதல் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணி பதிவேடு பதியப்பட வேண்டும். 480 நாட்கள் பணி முடித்த அனைத்து ஊராட்சி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் அறிவித்தப்படி ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு குளிர்கால படி உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும். நீலகிரியில் ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊராட்சி சங்க மாவட்ட செயலாளர் தொரை, பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், ராஜாமணி மற்றும் ராஜூ, சந்திரசேகர், பகவதி, போஜன், லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Panchayat workers ,
× RELATED புதுச்சேரி அரசின் பாண்லே பால் நிறுவன...