ஊதிய உயர்வை வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு,  அக். 29: தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க  வேண்டும் என ஈரோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 2 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில்  உள்ள 12,525 பஞ்சாயத்துக்களில் 66,130 பேர் திடக்கழிவு மேலாண்மை  திட்டத்தில், தூய்மை காவலர்களாக பணி செய்கின்றனர். இவர்களுக்கு, கடந்த  மார்ச் மாதம் 16ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி,  தூய்மை காவலர்களின் ஊதியத்தை மாதம் ரூ.2,600ல் இருந்து ரூ.3,600  ரூபாயாகவும், டேங்க் ஆப்ரேட்டர் ஊதியம் ரூ.2,600ல் இருந்து ரூ.4 ஆயிரமாகவும்  உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்பின்படி,  தற்போது வரை ஊதியம் உயர்வு வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க  கோரி நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. ஈரோடு  கலெக்டர் அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் தூய்மை காவலர்கள் மற்றும்  பல்வேறு அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.  ஆனால், அங்கு போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால், ஈரோடு சம்பத் நகர் கொங்கு  கலையரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்  எம்.பி.யும், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவருமான சுப்பராயன் தலைமை வகித்து துவங்கி  வைத்தார். இதில், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்ரமணி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈபி ரவி, வடக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர் சரவணன், விடுதலை சிறுத்தை வடக்கு மாவட்ட செயலாளர்  சிறுத்தை வள்ளுவன், விவசாயிகள் சங்க சுப்பு, குணசேகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் மற்றும் 500க்கும்  மேற்பட்ட தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு கலெக்டர்  கதிரவன் அழைப்பின்பேரில், 2 எம்.பி.க்கள் மற்றும் சங்க நிர்வாகிகள்,  தூய்மை காவலர் உட்பட 15 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று  கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர். அப்போது, கலெக்டர் கதிரவன்,  அரசுக்கு கோரிக்கையை எடுத்துக்கூறி, விரைவில் ஊதியம் பெற்றுத்தர நடவடிக்கை  எடுப்பதாக, உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தை  கைவிட்டு நேற்று மதியம் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் சட்டம்  ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க 2 டி.எஸ்பி.க்கள் தலைமையில் கலெக்டர்  அலுவலகத்திலும், சம்பத் நகர் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: