×

கஞ்சா விற்பவரை மாட்டி விடுங்க... தகவல் சொல்றவருக்கு ஆயிரம் ரூபா... ஆஃபர் அறிவித்தது பழநி காவல்துறை

பழநி, அக்.28: பழநி பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1,000 சன்மானம் வழங்கப்படுமென காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழநி பகுதியில் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, அடிவாரம், பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவு நடைபெறுவதாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க காவல்துறை சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு நகரின் மையத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் மூதாட்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் கஞ்சா விற்பனை பழநி பகுதியில் தங்கு தடையின்றி நடந்து வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு நடைமுறைகளை கையாள அறிவுறுத்தினர்.

இதன்படி தற்போது கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 சன்மானமாக வழங்குவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் பழநி சுற்றுப்புற கிராமங்களில் போலீசாரால் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த பலகையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும், தகவல் கொடுப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படுமா என்ற விபரம் பலகையில் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறையின் இந்த ஆஃபர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறது.      

Tags : Palani ,Rs ,
× RELATED பழநியில் அனுமதியற்ற மனைகளை வாங்க வேண்டாம்