×

திருப்புத்தூர் நகர் பகுதியில் வைக்கோல் பாரத்துடன் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்

திருப்புத்தூர், அக்.28:  திருப்புத்தூர் பகுதிகளில் அதிக பாரத்துடன் வைக்கோல்களை ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.  வெளி மாவட்டங்களில் கிடைக்கும் வைக்கோலை பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் போதிய தீவனம் கிடைக்காமல் இந்த வைக்கோலை மொத்தமாக வாங்கி ஏற்றிச் செல்கின்றனர்.  இதுபோன்று ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லாரியில் அளவுக்கு அதிகமாக வைக்கோலை ஏற்றிச் செல்லுவதால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் லாரியில் உள்ள வைக்கோல்கள் தாழ்வான மின்கம்பிகளில் உரசும் போது தீப்பற்றி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் வைக்கோல் லாரிகள் ரோட்டில் முன்னே செல்லும் போது, ரோட்டை முழுமையாக மறைப்பதால் பின்னே வரும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் செல்லுவதால் வாகன விபத்துகளும் நேரிடுகிறது. இந்நிலையில் திருப்புத்தூர் நகர் பகுதிகளில் அளவுககு அதிகமாக வைக்கோலை ஏற்றிக் கொண்டு லாரிகள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  எனவே இதுபோன்று அளவுக்கு அதிக பாரத்துடன் வைக்கோலை ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் நகர் பகுதிக்குள் வருவதை தடைசெய்ய வேண்டும் எனவும், அவ்வாறு வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : area ,Tiruputhur Nagar ,
× RELATED திருவில்லியில். நெடுஞ்சாலையில்...