×

குமரியில் சீனியாரிட்டி அடிப்படையில் ஆயுதப்படை போலீசார் காவல் நிலையங்களில் நியமனம்

நாகர்கோவில், அக்.28: குமரியில் சீனியாரிட்டி அடிப்படையில், ஆயுதப்படை போலீசார் உள்ளூர் காவல் நிலையங்களில் நியமிக்கப்படுவார்கள் என எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறி உள்ளார்.  போலீசார் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் வாரந்தோறும் கவாத்து பயிற்சி நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குமரி மாவட்ட போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்துக்குட்பட்ட போலீசார் கலந்து ெகாண்டனர். இதே போல் குளச்சல், கன்னியாகுமரி, தக்கலை ஆகிய துணை போலீஸ் சரகங்களிலும் கவாத்து பயிற்சி நடந்தது. மொத்தம் 1,250 பேர் இதில் பங்கேற்றனர். போலீஸ் பயிற்சியின் போது அளிக்கப்படும் அனைத்து பயிற்சிகளும், யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் இதில் அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சியை தொடங்கி வைத்து எஸ்.பி. பத்ரி நாராயணன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், உடல் நலனில் போலீசார் அக்கறை செலுத்த வேண்டும். கவாத்து பயிற்சியை, சிரமம் என கருதாமல் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். உங்களை நீங்கள் வலிமைப்படுத்த இந்த கவாத்து பயிற்சி உதவும். மன ஆரோக்கியமும் கிடைக்கும். பல்வேறு சிரமங்களை சந்தித்து நாம் பணியாற்றுகிறோம். ரோந்து பணியில் இருந்தாலும் கூட, இந்த பயிற்சிகளுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றார். பின்னர் பயிற்சியை பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த பயிற்சி முடிவடைந்ததும், ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டார். அப்போது குமரி மாவட்டத்தில் மட்டும், 2008 ல் பணிக்கு சேர்ந்து ஆயுதப்படைக்கு வந்தவர்கள் இன்னும் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படாமல், ஆயுதப்படையில் தான் உள்ளனர். வெளி மாவட்டங்களில் சிபாரிசுகள் பெயரில் பலர் நேரடியாக காவல் நிலையங்களுக்கு வந்து விடுவதால், ஆயுதப்படை போலீசார் கடைசி வரை ஆயுதப்படையில் தான் இருக்க வேண்டி உள்ளது என்றும் கூறினர். அப்போது எஸ்.பி., பத்ரிநாராயணன் சீனியாரிட்டி அடிப்படையில் ஆயுதப்படை போலீசார், உள்ளூர் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றார். எஸ்.பி.யின் இந்த உறுதிமொழியால், ஆயுதப்படை போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : Armed Police ,Police Stations ,Kumari ,
× RELATED சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி...