×

வாரிசு சான்றிதழ் வழங்க மறுப்பு கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மனு

கிருஷ்ணகிரி, அக்.28:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் சுப்பிரமணியன், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக, 2017 முதல்  இருந்து வருகிறேன். என்னுடைய தாயார் 2019லும், தந்தை கடந்த ஜனவரி மாதமும் இறந்தனர். இதனால், வாரிசு சான்று வேண்டி கடந்த ஏப்ரல் 14ம் தேதி விண்ணப்பித்தேன். மிட்டள்ளி விஏஓ., தங்கராஜ் வாரிசு சான்று வழங்க, ₹1 லட்சம் லஞ்சம் கேட்டார். நான் பணம் கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் எனது மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் நேரில் சென்று கேட்ட போது, பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்று வழங்கப்படும் என்று கூறிவிட்டார். பின்னர், மீண்டும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி விண்ணப்பித்தேன். தற்போது தாசில்தாரிடம் விண்ணப்பம் உள்ளது.

இந்நிலையில், என்னுடைய சகோதரிகளில் ஒருவர், முதலில் வாரிசு சான்றிதழ் வேண்டாம் என தாசில்தாரிடம் தெரிவித்தார். பின்னர்,சமாதானமடைந்து வாரிசு சான்று கேட்டு கையெழுத்திட்டு கொடுத்தார். ஆனால், தாசில்தார் வாரிசு சான்று தர முடியாது என்று கூறிவிட்டார். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, எனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்ட போது, அவரது 5 சகோதரிகளில் ஒருவர் வாரிசு சான்றிதழ் கொடுக்க வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர், அவரே சமாதானமடைந்து சான்று கேட்டுள்ளார். ஒருமுறை சான்றிதழ் வேண்டாம் என்று கூறி விட்டால், பின்னர் நீதிமன்றம் சென்று தான் வாரிசு சான்று வாங்க முடியும்,’ என்றார்.

Tags : President of Congress ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...