×

லாரியில் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு

திருவண்ணாமலை, அக்.28: ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 100 கிலோ கஞ்சா கடத்திய பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரி மற்றும் இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அதனை மடக்கி பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார். அதன்படி, ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சைபர் கிரைம் எஸ்பி சுமன், மங்கலம் எஸ்ஐ சத்தியநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று காலை கண்ணமங்கலம் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அதில், 40 சிறிய மூட்டைகளில் 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்த மார்க்பந்து மகன் உலகநாதன்(48), அப்துல்காதர் மகன் ஜாகிர்உசேன்(48), பாளையங்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் லூர்துஅந்தோணி(39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் பேரில், திருவண்ணாமலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், திருவண்ணாமலை பூவந்தகுளம் பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி ஆஷா(32), மாரியம்மன் கோயில் 3வது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன்(26), சமுத்திரம் நகரைச் சேர்ந்த சுகுமார் மனைவி சுலோசனா(45), அன்பழகன் மனைவி சகுந்தலா(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 7 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

Tags : persons ,Andhra Pradesh ,women ,Thiruvannamalai ,
× RELATED ₹3.80 லட்சம் மதிப்புள்ள பைக்குகள்...