திருச்சியில் மலிவு விலை வெங்காயம் விற்பனை துவக்கம்

திருச்சி, அக்.28: திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடையின் வாயிலாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை செய்வதை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறிக் கடையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் துவங்கி வைத்தனர். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

நமது மாவட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு 11 மெ.டன் பெரிய வெங்காயம் நேற்று (முன்தினம்) இரவு வந்துள்ளது. இன்னும் 20 மெ.டன் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நமது மாவட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் விலை குறையும் வரை இந்த மலிவு விலை பெரிய வெங்காய விற்பனை தொடரும். இதன்மூலம் வெளி சந்தையில் விற்கப்படும் வெங்காய விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வாரந்தோறும் 20மெ.டன் அளவிற்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது’ என்றார். கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, சரக துணைப்பதிவாளர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>