ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வியாபாரிகள், தொழிலாளிகள் முடிவு பாதுகாப்பு இல்லை: தினமும் திருட்டு

காந்திமார்க்கெட் கடந்த 7 மாதங்களாக பூட்டியே கிடக்கிது. கொரோனா பொதுமுடக்கத்தை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கப்பட்ட பின்னும் காந்தி மார்க்கெட் திறக்கப்படாமல் உள்ளது. மூடியே கிடக்கும் இந்த மார்க்கெட்டில் கடைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. நாள்தோறும் ஏதாவது ஒரு கடையை உடைத்து பொருட்களையும், பணத்தையும் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. உரிய பாதுகாப்பு இல்லை. கடைகள் பூட்டியிருந்தாலும் கடை வாடகையை மாநகராட்சிக்கு வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். பாலக்கரையை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (67). இவர் கடந்த 50 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட்டில் பிரியாணி அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையை கடந்த 2 நாட்களுக்கு முன் உடைத்து, கடையிலிருந்த மூட்டை தைக்கும் இயந்திரம், தராசு மற்றும் கல்லாவிலிருந்த பணத்தை (மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பு) திருடிச் சென்றுள்ளனர். செலவாகும் என்பதால் அவர் போலீசுக்கும் செல்லவில்லை. கொரோனா பொது முடக்கத்தால் ஏற்கனவே முடங்கி போயிருக்கும் வியாபாரிகளுக்கு இதுமேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

காந்திமார்க்கெட் இருக்கும் இடத்தில் ரூ.170 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்துடன் கடைகள் அமைய தி்ட்டமிடப்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகளை அப்புறப்படுத்தி கடைகள் கட்டினால், கட்டுமானத்தில் ஒரு பெரும் தொகை கமிஷனாக அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கைமாறும். தவிர, புதிய கடைகள் ஏலம் விடுவதன் மூலம் ஒரு கமிஷன் கிடைக்கும். தற்போது இருப்பதை காட்டிலும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதனால்தான் இத்தனை ஆண்டுகளாக மார்க்கெட்டே கதி என்று கிடக்கும் வியாபாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் துரத்தியடிக்க அரசும், அரசியல்வாதிகளும் துடிப்பதாக வியாபாரிகள் வேதனை பொங்க தெரிவிக்கின்றனர். எங்கள் வேதனை அனைத்தும் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

Related Stories:

>