×

குடிநீர் விநியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை, அக்.28: குடிநீர் விநியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கீழாத்தூர் ஊராட்சி கட்ராம்பட்டியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணறு கடந்த 2 மாதங்களுக்கு முன் பழுதடைந்து விட்டது. காவிரி கூட்டு குடிநீரும் முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதை கண்டித்து காலி குடங்களுடன் கீழாத்தூர் நாடியம்மன் கோயில் அருகே பெண்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த ஆலங்குடி தாசில்தார் கலைமணி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வடகாடு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தினால் ஆலங்குடி- பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி