×

குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்பவரே சிறந்த மனிதன்

கரூர், அக். 28: உலக புத்தக தினத்தை முன்னிட்டு பதிப்பகத்தின் சார்பில் நடந்த 5வது வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழாவில் கரூர் மாவட்ட மைய நூலக நூலகருக்கு சக்தி வை.கோ விருது வழங்கப்பட்டது.
மெய்நிகர் (ஜூம்) வாயிலாக நடைபெற்ற இந்த வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் நிகழ்வில் கரூர் மாவட்ட மைய நூலக நூலகர் சிவக்குமாருக்கு நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி, போட்டித் தேர்வுகள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சிறைவாசிகளுக்கு சிந்தனையூட்டும் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்வுகளை நடத்தியதற்காக முன்மாதிரி நூலகமாக விளங்கி வரும் கரூர் மாவட்ட மைய நூலகத்தின் நூலகருக்கு, சிறந்த நூலகருக்கான எழுத்தாளர் சக்தி வை.கோ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் சிவக்குமாருக்கு வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து ஜூம் வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது: தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும். இதிகாச காலங்களில் இருந்தே நல்ல மனிதர்களை தேடுகின்ற சூழ்நிலை இருந்துள்ளது. இந்த பூமிப்பந்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எங்கோ ஒரு மூலையில் எப்பொழுதோ ஒரு ஆளுமை நிறைந்தவர் கிடைக்கிறார். குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்பவரே சிறந்த மனிதன். ஒவ்வொருவரும் தான் செய்யும் பணியினை ஒரு வேலையாக கருதாமல் முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது, உத்வேகமும் உற்சாகமும் கிடைக்கும். புதுக்கோட்டை பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கின்ற போதே படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இன்று வரை அந்த பழக்கம் என்னிடம் உள்ளது. தினசரி நிகழ்வுகள், மாநில, தேசிய மற்றும் உலகச் செய்திகளை மாணவர்கள் அன்றாடம் அறிந்து கொள்ள வேண்டும். நேர்மையாக உழைத்தால் மட்டுமே உயர முடியும். சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து பிறந்தவர்களால் மட்டுமே சமூகத்தை புரட்டிப் போட முடியும். அறம் சார்ந்த வாழ்வே உயர்வான வாழ்வு. அறம் சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உயர்வான நிலையை அடையலாம் என்றார்.

Tags : community ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்