×

வேளாண், தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை திரும்ப பெற கோரி நவ.26ல் திருப்பூரில் 50 இடங்களில் மறியல்

திருப்பூர், அக். 28: வேளாண், தொழிலாளர் உள்பட பல்வேறு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் நவம்பர் 26ம் தேதி 50 இடங்களில் மறியல் நடக்கிறது. திருப்பூர் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்மமைப்பு கூட்டம் திருப்பூரில் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். இதில், சந்திரன், குமார் (சி.ஐ.டி.யு.), சேகர், ஜெகநாதன் (ஏ.ஐ.டி.யு.சி.) ரங்கசாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்.), சிவசாமி, பெருமாள் (ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி, முருகன் (எச்.எம்.எஸ்.), சம்பத், மனோகர் (எம்.எல்.எப்.) உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருமான வரி கட்டும் அளவிற்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரண தொகை வழங்க வேண்டும். ஒரு நபருக்கு மாதம் ஒரு முறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை, தொழிலாளர் சட்ட தொகுப்பையும் திரும்ப பெற வேண்டும். வங்கி காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். ரயில்வே, பாதுகாப்புத் துறை தொழிற் சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசு துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு மாற்றுவதை கைவிட வேண்டும்.

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை முறைப்படுத்துவதுடன், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ல் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெற செய்வது, இதற்காக மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் மறியல் போராட்டத்தை நடத்துவது, இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : places ,withdrawal ,Tirupur ,
× RELATED மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி