தி.மு.க.வினர் மீதான வழக்கை திரும்ப பெற ம.தி.மு.க. வலியுறுத்தல்

கோவை, அக். 28:  கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு பரப்புகிற வகையில் கோவை மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதை அறிந்த தி.மு.க.வினர், காட்டூர், ஆர்.எஸ்.புரம், குனியமுத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.  ஆனால், சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தி.மு.க.வினர் சுமார் 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து, அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது.

கருத்து, கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் இருந்தபோதிலும் கோவை மாநகரில் இதுபோன்ற செயல்கள் இதுவரை நடந்ததில்லை. அவதூறு பரப்புகிற வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை, யார் அச்சடித்தார்கள், அச்சகம் பெயர் என எந்த தகவலும் இல்லை. சுவரொட்டி ஒட்டுவது குறித்து பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிற மாநகர காவல்துறை, இது குறித்து முழுமையாக விசாரித்து, கோவை மாநகரின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.வினர் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: