×

கோவையில் கொரோனா பலி 1.2 சதவீதமாக குறைந்தது

கோவை, அக். 28: கோவை மாவட்டத்தில் செப்டம்பரில் உச்சத்தில் இருந்த கொரோனா உயிரிழப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மாநகராட்சியில் விரைவுப்பரிசோதனை, வீடு, வீடாக ஆய்வு, நடமாடும் பரிசோதனை வாகனங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் நோய்த் தொற்று பரவல் குறைந்து வருவாதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 600-க்கும் அதிகமாக இருந்தது. இது தற்போது 300-க்கும் கீழாக குறைந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் ஒன்றிரண்டாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் கோவையில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 2.1 சதவீதமாக இருந்தது. தற்போது உயிரிழப்பு சதவீதம் 1.2 ஆக குறைந்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவலும் கடந்த வாரத்தில் 8.1ஆக இருந்த நிலையில் தற்போது 6.2ஆக குறைந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறியதாவது: கோவையில் கொரோனா பரவல், உயிரிழப்பு சதவீதம் செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக மாநகரப் பகுதிகளில் அதிகரித்து இருந்தது. இதனால், நோய் பரவல், உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது தீவிரப்படுத்தப்பட்டது. நோய்த் தொற்று பரவலின் தீவிரத்துக்கேற்ப மருத்துவ முகாம்களை அதிகப்படுத்தியதுடன் மாதிரிகள் சேகரிப்பும் அதிகப்படுத்தப்பட்டது. தினமும், 7 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் அறிகுறிகள் இல்லாதவர்களிலும் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டன. முன் கூட்டியே கண்டறியப்பட்டதால் நோயின் தீவிரத்தன்மை குறைந்து உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தப்பட்டதால் நோய்த் தொற்று பரவலும் கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : deaths ,Corona ,Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்