ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு, அக். 28: ஈரோடு  ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை அமோகமாக நடப்பதால், ரெடிமேடு  ரகங்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த 3 வாரங்களாக தீபாவளி  விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை,  விஜயதசமியையொட்டி கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஈரோடு தினசரி  ஜவுளி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.  இந்நிலையில் நேற்று நடந்த வாரச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் மொத்த, சில்லரை வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். மேலும் பொதுமக்களின் கூட்டமும் அதிக  அளவில் காணப்பட்டது.

குறிப்பாக பல மாதங்களுக்கு பிறகு கர்நாடகா, ஆந்திரா,  கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள்  தெரிவித்துள்ளனர். இதனிடையே பனியன், ஜட்டி, பேன்ட், சட்டை உள்ளிட்ட  ரெடிமேடு ரகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள்கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக தீபாவளி விற்பனை கடந்தாண்டு அளவுக்கு  இருக்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த 3 நாட்களாக வியாபாரம்  அமோகமாக நடக்கிறது. நேற்று நடந்த ஜவுளி சந்தையில்  வெளி மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு  கொள்முதல் செய்துள்ளனர். இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

இந்தாண்டு தீபாவளி  வியாபாரம் சுமாராக இருக்கும் என்று கருதி புதிய ஆர்டர்களை நாங்கள் கொடுக்கவில்லை. இதனால் பழைய இருப்புகளை கொண்டு விற்பனை செய்து வந்தோம்.  தற்போது வியாபாரம் அதிக அளவில் நடந்து வருவதால், பனியன், ஜட்டி, சட்டை,  பேன்ட் உள்ளிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து புதியதாக ஆர்டர்கள் கொடுத்துள்ளோம். பனியன், ஜட்டி திருப்பூரில்  இருந்தும், பேன்ட், சட்டை ஆகியவை அகமதாபாத், பெல்லாரி ஆகிய இடங்களில்  இருந்து வருகிறது. தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு, மழை பாதிப்பு  உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து வர வேண்டிய ஜவுளிகள் வராததால்,  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நூல் விலை உயரவில்லை. ஆனால் கூலி  உயர்ந்துள்ளதால், கடந்தாண்டை விட சட்டை, பேன்ட் ரகங்கள் மட்டும் 10 சதவீதம்  வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: