கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

ஈரோடு, அக். 28:  தீபாவளி பண்டிகையொட்டி கூட்டம் அதிகரிக்கும் போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கி உள்ளதால், வணிகர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கமிஷனர் தெரிவித்தார். இதில், பல்வேறு வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்க அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாநகராட்சி சார்பில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், முதற்கட்டமாக வணிகர்கள் அவர்களது கடைகளில் ஒரே சமயத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். கடை ஊழியர்களும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஏராளமான வாடிக்கையாளர்கள் தொட்டு பார்த்த ஜவுளி, பொருட்களை, கடை ஊழியர்கள் பிற வாடிக்கையாளர்களுக்கு காட்டும் போது கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், ஊழியர்கள் சில நிமிடத்திற்கு ஒரு முறை கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளி மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

மேலும், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு கடை வீதிகளில் வாகனம் நிறுத்த போதிய இட வசதி இல்லாததால், கந்தசாமி வீதியில் உள்ள காமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடை வீதிகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் நிறுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடை வீதிகளில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை மாநகராட்சி கொரோனா தடுப்பு எச்சரிக்கை வாசகங்கள் ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஈரோடு கடை வீதிகளுக்கு ஈரோடு மட்டும் அல்லாது மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வதால் மேட்டூர் ரோடு, பிரப் ரோடு, ஆர்.கே.வி ரோடு, நேதாஜி ரோடு, பெருந்துறை ரோடு, பன்னீர் செல்வம் சந்திப்பு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி போன்ற கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ள சாலைகளில் தீபவாளி பண்டிகை முடியும் வரை தினந்தோறும் இரவு நேரங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>