×

கிருஷ்ணகிரியில் தீப்பற்றி எரிந்த கார்

கிருஷ்ணகிரி,  அக்.23: கிருஷ்ணகிரியில் ஓட்டல் எதிரே நிறுத்தியிருந்த கார் தீப்பற்றி  எரிந்தது. போலீசார் வந்ததும் காரில் வந்தவர்கள் மாயமான சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையிலிருந்து  ராயக்கோட்டை மேம்பாலம் செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு  நின்றிருந்த கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் ஒன்றிலிருந்து  புகை வந்ததை, அந்த ஓட்டல் காவலாளி பார்த்துள்ளார். பின்னர் ஓட்டலில்  இருந்த சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீயை அணைக்க  முடியவில்லை. காரில் இருந்து கரும்புகை எழுந்தது. காரின் அடிப்பகுதியில் தீ  எரிந்து கொண்டே இருந்ததால், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இது  குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்  சுரேஷ்குமார், எஸ்.ஐ., குமரன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில்  மூன்று பேர் ஸ்கார்பியோ காரில் வந்ததுள்ளனர். அப்போது காரின் முன்  பகுதியில் புகை வந்ததால் காரை ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு தீயை அணைக்க  முயன்றுள்ளனர். ஆனால் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அங்கு  வந்ததால் காரில் வந்தவர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார்  தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்  பதிவாகியுள்ள வீடியோவை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் காரை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர். இந்த காரை திருடி வரும்  வழியில் இந்த சம்பவம் நடந்ததா அல்லது காரை விட்டுச் சென்தற்கு வேறு ஏதேனும்  காரணம் உள்ளதா என தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காரின் முன்பகுதியில் இருந்த பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டதில் பேட்டரி  முழுவதும் எரிந்து தீ காரின் அடிப்பகுதி வரை பரவியுள்ளதாக தீயணைப்புத்  துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுது.

Tags : Krishnagiri ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி