7 மாதங்களுக்கு பின் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கம்

புதுச்சேரி,  அக். 23:   7 மாதங்களுக்கு பின் புதுவையில் தனியார் பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாடு முழுவதும் மார்ச் 23ம்தேதி கொரோனா தேசிய ஊரடங்கு  அறிவிக்கப்பட்டது. அன்று முதல் புதுவையில் பஸ், ரயில் உள்ளிட்ட பொது  போக்குவரத்துகள் முடக்கப்பட்டன. பின்னர் ஊரடங்கில் படிப்படியாக மத்திய, மாநில  அரசுகள் தளர்வு அளித்த நிலையில் ஆகஸ்ட் முதல் பிஆர்டிசி டவுன் பஸ்கள்  இயக்கப்பட்டன. காரைக்காலுக்கும் 2 பிஆர்டிசி பஸ்கள் இயங்கின.   இருப்பினும் புதுவையில் பொது போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும்  தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையிலேயே  இருந்தது. நாளையுடன் தனியார் பஸ்கள் இயங்கி 7 மாதம் நிறைவடையும் நிலையில்  பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அவற்றை இயக்க மாநில அரசு நடவடிக்கை  மேற்கொண்டது.

இதற்காக முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் தனியார் பஸ்  உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் பஸ்கள் இயக்கப்படாத  காலத்துக்கு சாலைவரி வசூலிக்கக் கூடாது, 2 காலாண்டு வரிகளை ரத்து செய்ய  வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து  புதுவையில் நேற்று முதல் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின. முதல் நாளில்  மடுகரை, திருக்கனூர், மதகடிப்பட்டு, பாகூர், கனகசெட்டிகுளம், வில்லியனூர்,  கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள்  இயக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் ஏறி சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து  பயணித்தனர்.  மொத்தம் 90 தனியார் டவுன் பஸ்கள் உள்ள நிலையில் அவற்றில் பெரும்பாலானவை  நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பழுதுநீக்குதல் பணி,  இன்சூரன்ஸ் காலாவதி, கிருமிநாசினி தெளிப்பு, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட  சில பிரச்னைகளால் முழுமையாக இயக்கப்படவில்லை.

130 தனியார் பஸ்கள்  விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  இயக்கப்பட்டிருந்த நிலையில், அம்மாநில அரசின் தேவை என்பதால் புதுச்சேரி  அரசின் உதவியுடன் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இப்பகுதிகளுக்கு புதுவையில் இருந்து பஸ்கள் செல்ல தமிழக அரசு ஒப்புதல்  வழங்கியதும் அங்கும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories: