×

திண்டிவனம் -புதுச்சேரி சாலையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம் வாகன ஓட்டிகள் அச்சம்

திண்டிவனம், அக். 23:  திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி கும்பல் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது.இதுகுறித்து கார் ஓட்டுனர் மாசி என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, கடந்த 20ஆம் தேதி இரவு புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வந்து கொண்டிருந்தேன். அப்போது சுங்கச்சாவடியை கடந்து இரவு 11.30 மணி அளவில் சுமார் 3.கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் எனது காருக்கு முன்னால் சென்ற 2 கார் மீது கல் வீசியது. அந்த கார் ஓட்டுனர்கள் உயிருக்கு பயந்து காரை நிறுத்தாமல் அதி வேகமாக சென்றனர். பிறகு பின்னால் வந்த எனது வாகனத்தின் மீதும் கற்களால் தாக்கினார்கள். நான் அதி வேகமாக சென்று கிளியனூர் சோதனை சாவடியில் நடந்ததை போலீசாரிடம் தெரிவித்தேன்.

அதற்கு போலீசார் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களும் இல்லாததால் போலீசார் இரவு ரோந்து பணியை மேற்கொள்ளாததால் அதிக அளவில் கொள்ளைக் கும்பல்கள் வாகனங்களை தாக்குகின்றன. மேலும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இதற்கு முன் புதுச்சேரியில் மதுபானங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் கடத்திக்கொண்டு சென்று தமிழக பகுதிகளில் விற்பனை செய்வார்கள். தற்போது புதுச்சேரியிலும் மதுபான விலை அதிகரித்ததால் தற்போது மதுபான கடத்தல் குறைந்துவிட்டது.

இதனால் அப்போது  போலீசார் மதுபானங்களை பிடிப்பதற்காகவே சுங்கச்சாவடி மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தற்போது சமூகவிரோதிகள், கொள்ளை கும்பல் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை மெத்தனம் காட்டுகின்றது. புதுச்சேரி மதுபானங்களை கடத்தி செல்பவர்களை பிடிக்க ஆர்வம் காட்டும் போலீசார் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : road sniper gang ,Tindivanam-Puducherry ,motorists ,
× RELATED தங்கவயலில் ஒட்டு போட்ட சாலையை அடித்து சென்ற கனமழை: வாகன ஓட்டிகள் அவதி