×

சேறும் சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி திருவண்ணாமலை- திருக்கோயிலூர் சாலையில்

திருவண்ணாமலை, அக்.23: திருவண்ணாமலை தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும் சகதியமாக மாறியதால், வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். சீரமைக்க எதிர்ப்பார்க்கின்றனர். திருவண்ணாமலையில் நெரிசலான பகுதியில் அமைந்திருந்த ஒட்டுமொத்த காய்கறி மார்க்கெட், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை- திருக்கோயிலூர் சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி மைதானத்தில், தற்காலிக ஒட்டுமொத்த காய்கறி மார்க்கெட் தொடங்கப்பட்டது.

தினமும் அதிகாலை 2 மணி முதல் பகல் 12 மணி வரை ஒட்டுமொத்த காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் இங்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியதால், நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிபடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் மார்க்கெட் அமைந்திருந்தும், அதை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அங்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் வெளியூர்களில் வாகனங்களில் காய்கறிகளை கொண்டுவருவோர், சகதியில் நடந்தபடி காய்கறி மூட்டைகளை சுமந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தி, சகதிகளை அகற்றி சீர்படுத்தித்தர வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : vegetable market vendors ,mud ,road ,Thiruvannamalai-Tirukoilur ,
× RELATED பழுதடைந்த சாலையால் அவதி