182 டன் கடத்தல், பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல் குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை

வேலூர், அக். 23: வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி தொடங்கி அக்டோபர் மாதம் 13ம் தேதி வரை மொத்தம் 182 டன் கடத்தல் மற்றும் பதுக்கல் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 லாரிகள் உட்பட 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி ஆந்திரம், கர்நாடகம் உட்பட வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் பணியில் பொது வினியோகத்துறை அதிகாரிகள், உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், பறக்கும் படையினர் உட்பட பல்வேறு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் பொது வினியோகத்துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் 13ம் தேதி வரை ₹10 லட்சத்து 28 ஆயிரத்து 876 மதிப்புள்ள 182 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக 5 லாரிகள், மினிவேன்கள், பைக்குகள் உட்பட மொத்தம் 32 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செயயப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 94,858 கிலோ அரிசியை வேலூர் வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும்படை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு ₹5 லட்சத்து 35 ஆயிரத்து 947 ஆகும். இவற்றில் வீடுகளிலும், பொதுவெளியிலும் பதுக்கி வைக்கப்பட்டும், கேட்பாரற்றும் கிடந்த 32,842 கிலோ அரிசி அடங்கும். இதுதொடர்பாக வீடுகளின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே, ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீதும், வீட்டிலோ அதன் அருகிலோ பதுக்குபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களுக்கு தெரியும் தகவல்களை மாவட்ட வழங்கல் அலுவலர், பறக்கும்படை தனி தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: