×

கம்பத்தில் கஞ்சா பதுக்கலை கண்டறிய ‘வெற்றியுடன்’ ரோந்து

கம்பம், அக். 23: கம்பத்தில் கஞ்சா பதுக்கலை கண்டறிய போலீசார் மோப்ப நாய் வெற்றியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கம்பம் நகரம், தமிழக- கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. கஞ்சா கடத்தலை தடுக்க உள்ளூர் போலீசார், போதை பொருள் தடுப்பு போலீசார், தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கஞ்சா கடத்திய 62 பேர் கைது  செய்யப்ட்டுள்ளனர். இதில் 15 பேர் சிறையில் உள்ளனர். 5 பேர் மீது  குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி கஞ்சா கடத்தல் மறைமுகமாக நடந்து வருகின்றன.

தேனி மாட்டத்தில் குறிப்பாக கம்பத்தை கஞ்சா இல்லா நகராக மாற்ற மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உள்ளூர் போலீஸ் மட்டுமின்றி தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தேடுதல் வேட்டையில் பதுக்கி வைத்திருக்கும் கஞ்சாவை கண்டறியும் வகையில் 2 வயதான மோப்பநாய் வெற்றியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கம்பம் வாரச்சந்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில் கம்பம் வடக்கு சப்இன்ஸ்பெக்டர் திவான்மைதீன், மோப்ப நாய் பயிற்சியாளர்கள் ஜெகநாதன், கார்த்திக் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். ஏற்கனவே கம்பத்தில் நடந்த ரோந்து பணியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை மோப்பநாய் வெற்றி கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ