×

கொரோனா தடையால் 6 மாதமாக கடையை திறக்காமல் வருவாய் இழந்த சிறு வியாபாரிகள் சுற்றுலா தலங்களை திறக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம், அக்.23:  தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அரசால் விதிக்கப்பட்ட தடை தொடருவதால், 6 மாதத்திற்கும் மேலாக கடைகளை திறக்க முடியாமல் சிறுவியாபாரிகள் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு தடையினால் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அரசு தடை விதித்தது. இதனால் தனுஷ்கோடிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. தனுஷ்கோடிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுரோடு வளைவில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பொதுமக்களின் வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளனர்.

மாதந்தோறும் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று வரை சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்ப்ட்ட தடை தொடர்கிறது. இதனால் கொரோனா லாக்டவுன் நாள் முதல் இன்று வரை 6 மாதங்களுக்கும் மேலாக தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல முடியவில்லை. மீன் ஏற்றும் வாகனங்கள் தவிர்த்து அரசு நகர் பேருந்து, ஆட்டோ, வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களும் தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதியில்லை.

இதனால் தற்போது வெளியூர்களில் இருந்து வாகனங்கள் மற்றும் பேருந்து, ரயிலில் ராமேஸ்வரம் வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மட்டும் செய்து விட்டு ஊர் திரும்புகின்றனர். தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில், தனுஷ்கோடி புயலில் சேதமடைந்த கட்டிடங்கள், அரிச்சல்முனை பகுதிகளை பார்வையிட செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் மட்டுமே நம்பி தனுஷ்கோடி மற்றும் கோதண்டராமர் கோயிலில் வியாபாரம் செய்து வரும் சிறுவியாபாரிகளின் இருநூறுக்கும் மேற்பட்ட கடைகள் ஆறு மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. கடல்சங்கு, சிப்பி பொருள், டீகடை, உணவு விடுதி, குளிர்பானக்கடை, பெட்டிக்கடை உட்பட அடைக்கப்பட்ட தங்களது கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகளின் குடும்பத்தினர் அன்றாட வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். மாற்றுத்தொழில் எதுவும் இல்லாத நிலையில் வருவாய் இழந்து தவிக்கும் சிறுவியாபாரிகளின் நலன் கருதி அடுத்த அறிவிப்பிலாவது தனுஷ்கோடி உள்ளிட்ட ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் செல்லக்கூடிய சுற்றுலா தலங்களை திறக்கவும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வழக்கம்போல் இவற்றை பார்வையிடவும் அனுமதி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : traders ,tourist sites ,shop ,Corona ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி