×

திருவாரூர் மாவட்டத்தில் இலக்கு நிர்ணயித்த 2.75 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பணி நிறைவு

திருவாரூர், அக்.23: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 2 லட்சத்து 75ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி பணிகள் முடிவுற்றுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் குறுவை சாகுபடியானது 97 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இதுவரையில் 90 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவுற்றுள்ளன. இதனையடுத்து இந்த வயல்களில் தற்போது தாளடி பயிர் சாகுபடியானது நடைபெற்று வரும் நிலையில் இதுவரையில் 55 ஆயிரம் ஏக்கரில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா சாகுபடி இலக்காக 2 லட்சத்து 75 ஏக்கரில் சாகுபடி பணிகள் துவங்கிய நிலையில் இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவுற்றுள்ளன. இதில் நேரடி விதைப்பு பயிராக 58 ஆயிரம் ஏக்கரிலும், திருந்திய நெல் சாகுபடி 44 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள ஏக்கரில் நடவு பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்கனவே 5 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (நேற்று) மேலும் 1300 மெ.டன் மாவட்டத்திற்கென யூரியா உரம் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : district ,Thiruvarur ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்