×

நன்னிலம் ஒன்றியத்தில் ரூ.75 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

திருவாரூர், அக்.23: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன்படி பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், தேசிய வேலை உறுதி திட்டம் ஆகியவற்றின் கீழ் ஆனை குப்பம், சலுப்பேரி, வீதிவிடங்கன், அச்சுதமங்கலம், வாழ்க்கை, முடிகொண்டான், திருமீயச்சூர், கொல்லுமாங்குடி, வேலங்குடி, மாவட்டகுடி உட்பட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஊராட்சி தலைவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் கடந்த 2017- 18 நிதியாண்டு திட்டத்தில் ரூ ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பில் வீதிவிடங்கன் ஊராட்சியில் புத்தாற்றின் குறுக்கே பூங்குளம் மற்றும் பெரும்படுகை கிராமத்தை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தினை பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் சலுப்பேரி பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த பாலசுப்ரமணியன் அங்கு விவசாயிகளிடம் நெல் கொள்முதலில் இருந்து வரும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி செயலர் லதா மற்றும் பொறியாளர்கள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உதுமான், திமுக ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், வரத ஆனந்த் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ