×

விலை எகிறியதால் சின்னவெங்காயம் அறுவடை விறுவிறு...

பெரம்பலூர், அக்.23: உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உச்சத்தைத் தொட்டது. தினசரி காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரூ110க்கு விற்கப்படுகிறது. பழசு பட்டறையில் பதுங்குவதால் புதுசு சருகு நீக்கி சந்தைக்கு அனுப்பும் பணிகள் ஜரூராக நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டம், மானாவாரி சாகுபடி செய்யும் பூமியாகும். கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள இங்கு பருத்தி, மக்காச் சோளம், சின்ன வெங்காயம் ஆகிய 3 பயிர்கள் மட்டுமே 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் பெரம்பலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஹெக்டேர் முதல் 20 ஆயிரம் ஹெக்டேர் வரை விளையக்கூடியது.

இதனாலேயே மாநிலத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக முதலிடம் வகித்து வருகிறது. அதிலும் ஆலத்தூர் ஒன்றியம் சின்ன வெங்காய சாகுபடியில் சொர்க்க பூமியாகத் திகழ்வதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிக்குளத்தில் சின்ன வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைத்து அது தற்போது ஏல மையமாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புமைய மாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில்தான் விவசாயிகளே தங்கள் வயலில் பட்டறை அமைத்து பாதுகாக்கும் யுக்தியைக் கையாண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னவெங்காயம் உற்பத்தி அதிகமென்றாலும் அதற்குரிய விலையை நிர்ணயிக்க முடியாத அவலநிலையே உள்ளது.

இதன் காரணமாக நாட்டையே அதிரச்செய்துள்ள வெங்காய விலையேற்றத்தில் பெரம்பலூர் மாவட்டமும் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக பட்டறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தாலும், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுபோல் விலை அதிகரித்து சாதார ணமாக சதத்தைக் கடந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது பெரம்பலூர் உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.88க்கு விற்கிறது. இதனால் தினசரி காய்கறி மார்கெட்டில் ரூ.100க்கும், ரூ110க்கும் விற்கப்படுகிறது. அதேநேரம் விவசாயிகளிடம் ரூ.75 முதல் ரூ.85க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது.

தலைநகர் சென்னைக்கு இங்கிருந்து வியாபாரிகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.90வரை விலை வைத்து அனுப்பி வைக்கப் படுகிறது. தேசிய அளவில் வெங்காயம் மீண்டும் விலை மதிப்புள்ள பொருளாக உரு வெடுத்துள்ளதால் இன்னும் 2 வாரங்களுக்கு மவுசு குறையாது என்பதால் சின்ன வெங்காயம் பட்டறைகளிலேயே பதுக்கி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அறுவடை செய்யும் சின்ன வெங்காயம் விறுவிறுப்பாக சருகு நீக்கி சந்தைக்கு அனுப்பும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. புது வெங்கயமாக இருந்தாலும் விலையேற்றத்தால் பழசுக்கு இருக்கும் மவுசு புதுசுக்கும் அளிக்கப்படுகிறது. இதனால் அறுவடை பணிகள் அனலாய் பறக்கிறது.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...