×

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியை தொடர வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை போராட்டம்

கரூர், அக். 23: மேல்நிலைத் தொட்டி பணி நடைபெற இடையூறாக உள்ள பிரச்னையை களைந்து பணிகள் தொடர்ந்த நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் நேற்று காலை 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் காரின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகளிடம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பாலராஜபுரம் கணேசா நகர் 4வது வார்டு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி மேற்கொள்வதற்காக பொக்லைன் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொண்ட நிலையில் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகள் மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். எனவே இந்த பிரச்னையை களைந்து பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கி விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Women blockade protest ,office ,Karur Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்